Sunday, June 27, 2021

அறிமுக தத்துவவியல் - 6. உயிர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

 அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

6. உயிர்

அறிவெல்லைக்கு எட்டும் பருப்பொருள் (Matter) மற்றும் சக்தி (Energy) என்பன தவிர இவைகளை இருப்பதாக அறியும் உயிர் உண்டு எனவும் இதனாலேயே பெறப்படுகிறது. பருப்பொருள் மற்றும் சக்தியிடமிருந்து உயிர் வந்ததா அல்லது உயிரிலிருந்து உயிர் வந்ததா? உயிரிலிருந்துதான் உயிர் வந்தது என்பதை ஒரு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. ஒரு டெஸ்ட் டியூபில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அது காற்றுபுகா விதம் அடைத்து வைத்தால் உயிர் அசைவு அங்கு இல்லை. ஆனால், அந்த டெஸ்ட் டியூபில் காற்று வழி விட்டால் உயிர் அசைவு சில நாட்களில் தென்படுகிறது.

பூமியில் முதல் உயிரின் தோற்றம் பற்றி மூன்று கோட்பாடுகள் உள்ளன.

1.   வேற்றுக் கிரகங்களிலிருந்து ஆகாய வழியாக பூமிக்கு வந்திருக்கலாம்.

2.   இறைவஸ்துவின் படைப்புக் காரியத்தால் முதல் உயிர் தோன்றியிருக்கலாம்.

3.   ஜடத்தின் பரிணாம  மாற்றத்தால் முதல் உயிர் தோன்றியிருக்கலாம்.

முதல் கோட்பாடு பூமியில் முதல் உயிர் தோன்றிய விதம் கூறுகிறதேயன்றி வேற்றுக் கிரகித்தலாவது அது எப்படித் தோன்றியது எனக் கூறவில்லை.

இரண்டாவது கோட்பாட்டினை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை. அறிவியல் என்பது இரண்டு அடுத்த அடுத்த கருத்துக்கிளிடையே சங்கிலித் தொடர்பு ஏற்படுத்துவதை நிரூபண சாத்தியத்தில் மட்டுமே எற்கும். ஒரு கருத்து நிரூமணமானால் மட்டுமே உண்மை எனக் கொண்டால், அதே கருத்தின் நீரூபணமாகாத பகுதி உண்மை அல்ல என பெறப்படுகிறதல்லவா? ஒரு கருத்து புலனாகு பகுதி மட்டும்தான் கொண்டிருக்குமென நிரூபிக்க அறிவியலில் இடமில்லை. கருத்தின் புலனாகாத நிரூபிக்கப் படாத பகுதியின் கதி என்ன என்பதற்கு அறியிவிலில் பதிலில்லை.

‘எல்லாம் செய்யப்படுமுன் ஒன்றும் செய்யப்பட்டதாகாது’

எனும் ஸ்ரீஅரவிந்தரின் போதனையின் படி, கடைசிவரை செய்துவிடவேண்டும். ஆன வரை செய்யப்பட்டதில் மனிதனுக்கு ஒரு வாழ்வு காட்டும் அறிவியல் அடிக்கடி விமர்சனத்துக்குள்ளாவதில் வியப்பில்லை அல்லவா?

மேற்சொன்ன மூன்று கோட்பாடகளில் இரண்டாவதுதான் இதுவரை உடன்படுதரத்தில் உள்ளது. படைப்புப் பரிணாமத்தில் (Creative Evolution) உயிர் உருவாவது ஒரு கிரமவரிசைத் திட்டம்  (Designated Process) எனக் கொள்வது ஏற்புடையது.

இயந்திரகதிவாதம் (Mechanism), உயிர்வாதம் (Vitalism), இயல்புவாதம் (Naturalism), பொருள்முதல்வாதம் (Materialism) ஆகியன இவைகளை விவாதிக்கும் பல வாதங்கள்.

உயிரின் மூன்று தன்மைகளாவன் –

1.   உயிர் என்பது உறவாட்ட ஜோடனையில் (relational fix) உள்ள பகுதிகளால் ஆனது.

  1. தூண்டுதலுக்குப் பதில் தரக்கூடியது. (Respsonsive to stimuli)
  2. சுய நிலைப்பு உடையது (self-perpeuative)

சுய நிலைப்பு என்பதின் விரிவாகச் சமீபத்திய ஆராய்ச்சியில், ஆட்டோ பொய்யஸிஸ் –- autopoiesis –எனும் கருத்தின்படி, உயிர்

  1. தன் புத்துரு – self renewal
  2. தன் சூழ்தகவாக்கம் – (Self adaptation)

எனும் இரண்டு உத்திகளால் தன்னை தொடர்இருப்பில் வைத்துக்கொள்ளும். இவைகளைப் பற்றி சென்ற அத்தியாயத்திலும் சற்று பார்த்தோம். இவைகளை உயிர் எனும் கருத்தில் அடக்கலாம் என்றால் மனிதன் என வரும்போது உயிர்-மனம் எனும் கூட்டுக் கருத்தில் காண வேண்டியுள்ளது.

முதல் கருத்தின்படி, தன் உள்விஷயங்களில் தன்னை செப்பனிட்டுக்கொள்ளதலும், இரண்டாவது கருத்தின்படி தன் சூழலுடன் தன்னைச் செப்பனிட்டுக் கொள்ளுதலும் ஆகும்.

ஆட்டோ பொய்யஸிஸில் அடுத்த துணைக் கருத்து என்னவென்றால், ஓர் உயிர் தன் உள்விஷயங்களில் அடர்த்தியாக இருந்து வெளிவட்டாரச் சூழலிலிருந்து கொஞ்சமே எடுத்துக் கொள்ளும். அல்லது, தன் உள்விஷயங்களில் லேசாக இருந்து வெளிவட்டாரச் சூழலிலிருந்து அதிகம் எடுத்துக் கொள்ளும்.

இனி, ஆட்டோ பொய்யஸிஸ் எனும் கருத்து மூன்று அடுக்குகளில் நாம் அறியலாம்.

தனி உயிர்

ஆட்டோ பொய்யஸிஸ்

சமூக வாழ்க்கை

ஆட்டோ பொய்யஸிஸ்

தத்துவவியல்

ஆட்டோ பொய்யஸிஸ்

தன் புத்துரு

தன் சூழ் தகவாக்கம்

தன்னளவு திறமையேற்றம்

சூழலுடன் கைகோர்த்து வளர்தல் 

 

(பேருந்து ஓட்டுனர் சாலையைப் பிடித்து பேருத்து ஓட்ட ஸ்டீயரிங்கை சுழற்றுவது போது மனிதன்  மனதை செப்பனிடுதல்)

ஒருவனின் எண்ணத்திட்டுக்கள் – thought mass -- தன் புத்துரு ஆகுதல்

எண்ணத்திட்டுக்கள் சூழலாலும்

பிறராலும் மாறுதல் அடைதல்,

 

தன் எண்ணத்திட்டுக்கள்

பிறரின் சூழலை மற்றும் எண்ணத்திட்டுக்களை மாற்றுதல்

 

அறிவியலாளரைப் போல கிடைத்த உண்மைகளை சங்கமித்து ஆனமட்டும் ஒரு திரட்சி வாழ்க்கையை (workable life)  சமுதாயத்திற்குக் காட்டுவதில் தத்துவவாதி திருப்தி அடைவதில்லை. அவனுடைய கேள்வியெல்லாம், உயிர் மற்றும் மனம் என்பவைகளின் தோன்று மூலம் என்ன? தோன்று காரணம் என்ன? அவைகள் ஏதோ ஒரு எளியதின் உருப்பெருக்கமா? அல்லது தங்களளவு ஒரு புதுச் சிருஷ்டியா என்பவைதான்.

இந்தியத் தத்துவங்களில் நியாய தத்துவம் புகழ்பெற்றது. அதில்

·          சத்காரியவாதம் (மூலத்தில் உள்ளதே வெளித்தோன்றும்). உதாரணத்திற்கு, தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை.

·          அசத்காரியவாதம் எனும் இரண்டு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.(மூலத்தில் இல்லாததும் வெளித்தோன்றும்). உதாரணத்திற்கு, ஆக்ஸிஜனிலும் ஹைட்ரஜனிலும் இல்லாத குணங்கள் நீரூக்கு வருவது போல. நீளத்திலும் அகலத்திலும் இல்லாத பரப்பு குணம்,  அவைகளைப் பெருக்குவதால் வருகிறது.

ஜடம், உயிர் என்பவைகளின் தோற்றமூலத்தைப் பற்றி வாதங்கள் இருக்க, இவையிரண்டையும் முறைப்படுத்தி முடுக்க ஒரு “முடுக்குவான்” (Moving Cause) இருக்கவேண்டுமென கூறி,  பல தத்துவவியலாளர்கள் அம்முடுக்குவானுக்கு பல பெயரிட்டு விளக்கினார்கள். கீழ் கண்ட பட்டியலில் பெயர்களையும் பெயரிட்ட தத்துவவாதிகளையும் காணலாம்.

 

முடுக்குவானின் பெயர்

தத்துவவாதிகள்

இறைவன்

ஹீப்ரு தத்துவம் மற்றும் பல தத்துவவாதிகள்

தலையாய நகர்த்தி – Prime Mover

முதல் முடுக்கி – first mover

இறைவன் - God

அரிஸ்டாட்டில்

உலகக் கட்டுமானி – world builder - Demiurgus

பிளேட்டோ

நௌஸ் Nous அல்லது மனம்

அநாக்ஸிகோரஸ்

Natura Naturans

Bruno and Spinoza

பூரணக்கருத்து Absolute Idea

Hegal

பூரண அகம்பாவம் Absolute Ego

Fichte

தூய படைப்புச் சக்தி Pure Creative Energy

Schelling

பூரணச் சித்தம் Absolute Will

Shopenhauer

இச்சாவலிமை will to power

Nietzshe

உணர்வறியா இச்சை Unconscious Will

von Hartmann

உலக ஆன்மா World Soul

Fechner

அறியவொண்ணாதது  Unknowable

Spencer

தர்ம ஜனன வலிமை  Power that makes righteousness

Mathew Arnold

பூரண ஆத்மா Absolute soul

Modern Idealist

நிர்வகிக்கும் காரணி Elan vital அதாவது organising factor

Henry Bergson

 தொடரும் .....

Monday, June 14, 2021

அறிமுக தத்துவவியல் - 5. வெளி - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

  

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

5. வெளி

 

வெளிகள் ஐந்து.

இருப்பு வெளி. எண்ண வெளி. கணித வெளி. கால வெளி. வாழ்வெளி என வெளிகள் ஐந்து. இனி ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக சிறிது ஆராய்வோம். இங்கு ஒரு மேல்போக்கு விவரங்களே தரப்படுகின்றன. விருப்பம் உள்ளோர் அதற்கான இணையதளத்தில் தேடலாம்.

இருப்பு வெளி  -- பேரண்டம், அண்டம், அண்டவெளி, பிரபஞ்சம், பெருவெளி  எனும் இவ்வார்த்தைகளால் குறிக்கப்படும் ஆகாயம் என்பது நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்பொருட்கள் ஆகினயனவற்றை உள்ளடக்கிய வெட்டவெளி ஆகும். அதனை அடையாளப்படுத்த எதுவுமே இல்லை. அதற்கு ஒரு ஆரம்ப நுனி, முடிவு நுனி, நடு, ஒரம், மேலே, கீழே என்பதெல்லாம் குறிக்க முடியாது. வெளிக்கு எல்லை உண்டா என இன்று வரை தெரியாது. அதனை ஒரு அடைபட்ட இடம் எனக் கொண்டால் அதன் விட்டம் 6000 மில்லியன் ஒளி ஆண்டுகள் என ஒரு தோராயக் கணக்கு உண்டு.

சூரியக் குடும்பம் – நாம் வாழும் பூமியை ஒரு கிரகமாகக் கொண்டு நம் சூரியக் குடும்பம், வட்டத் தட்டு வடிவமுடைய ‘கேலக்ஸி’ எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் ‘பால்வெளி’ எனும் அதன் சுற்று வளையத்தில் உள்ளது. கேலக்ஸியை ஒரு நகரமாகக் கொண்டால் சூரியக் குடும்பம் ஒரு சிறு புறநகர். இந்தப் பால் வீதி தட்டின் மிக அதிக விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். மிகச்சிறிய விட்டம் 20000 ஒளி ஆண்டுகள். நம் சூரிய மண்டலம் வேகா எனும் நட்சத்திரத்தை நோக்கி நகர்கிறது. வினாடிக்கு 20 மைல் வேகத்தில் பூமி சுற்றுதளத்தில் நகர்கிறது. 

நம் சூரியக் குடும்பத்தின் அளவு என்ன தெரியுமா? சூரியனிடமிருந்து ஒரு ராக்கேட் நிமிடத்திற்கு 2 மேல் வேகத்தில் அனுப்பினால், கடைசி கிரகமான “பிளேட்டோ” வை அடைய 3450 ஆண்டுகள் ஆகலாம் என ஒரு கணக்கு.

எல்லா நடச்த்திரங்களும் நகர்கின்றன. ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பதால் நகராதவை போலத் தோற்றமளிக்கின்றன. பால் வீதியும் வினாடிக்கு 200 மைல் வேகத்தில் நகர்வதாக ஒரு கணக்கு.

Tidel Theory யின்படி, சூரியனுக்குப் பக்கத்தில் வந்த இன்னோரு நடசத்திரத்த்தால், அந்த நட்சத்திரத்தில் ஒரு பேரலை எழுந்து சிதறிய ஒளிப்பந்துகளால் கிரகங்கள் தோன்றியிருக்கலாம் என ஒரு கருத்து. பூமி தோன்றி 5000 மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன.

கணித வெளி – புள்ளி, கோடு, கோளம், வட்டம், சதுரம் முக்கோணம் என கணிதம் காட்டும் பல வெளிகள் உள்ளன. இடவெளியிலும் கணித வெளியிலும் நீளம், அகலம், உயரம் என முப்பரிமாணம் உண்டு. நான்காவதாக ஒரு பரிணாமத்தைச் சொல்லலாமென்றால் அது கால வெளி.

கால வெளி – இடவெளியில் நகராத வானமும் நகருவதான நட்சத்திரங்களும், கிரகங்களும், விண்வெளிப் பொருட்களும் உள்ளன. வானத்தின் இடத்தை இங்குப் பட்டியலிடப்ப்ட பொருட்கள் அடைக்கின்றன. எனவே வானம் பொருளால் அடைபடுவதாக இருக்கிறது. ஆனால் எதனாலும் அடை படாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால்  பெறப்படுகிறது. கால வெளியில் காலமே நகருவதாக உள்ளது. நகராத காலத்தை மனிதனால் கருதமுடியவில்லை. ஆனால், காலத்தை அறியாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால் பெறப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என மூன்று காலத்தை அடையாளம் காணலாம். ஆனால் காலம் நகருவதால் ஒரு காலத்தில் வருங்காலம் என இருந்ததுதான் நிகழ்காலமாகி கடந்தகாலமாகிறது.

எண்ண வெளி – மிருகங்களில் இயங்குவது எண்ணவெளிதானா என இன்னும் தெரியவில்லை.  மனித மனத்தில் எண்ணங்களால் அடைபடக் கூடிய ஒரு வெளிதான் எண்ண வெளி.

வாழ்வெளி – மிருகங்களுக்கு வாழ்வு உண்டு. வாழ்வெளி இல்லை. மனிதன் தனக்கென ஒரு வாழ்வெளி கொண்டுள்ளான். எண்ணவெளியின் துணையுடன்தான் வாழ்வெளி நிலவுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் கீழ்கண்ட ஒரு நேரத்தில் ஒரு துணைவெளியில் இருக்க முடியும்.

வீடுவெளி – வேலைவெளி – தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி

வீடுவெளி

வேலைவெளி –

தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி

தூக்கம், முழிப்பு

பல் துலக்குதல். மலஜலம் கழித்தல், குளித்தல், அலங்காரம், பூஜை உணவு

வருமான ஈடுபாடுகள் அனைத்தும்

கோவில், புத்தகக் கடை, நூலகம், TV, சினிமா, ப்த்திரிகை வாசித்தல், அரட்டை, நிகழ்ச்சிகளுக்குச் செல்லுதல்,

 

இம்மூன்றும் அதனதன் வடிவக் கட்டகம் (Design) உடையவை. மனிதன் வடிவக் கட்டகத்திற்கு அடிமை. அவனுடைய சுகநாட்டம் அவனை அவ்வாறு ஆக்குகிறது. மனிதனை உயர்மனிதனாக்க இந்த வடிவக் கட்டக ருசியை அவன் விட வேண்டும். அதாவது அவன் இருக்கும் இம்மூன்று வெளிகளுடன் நான்காவது வெளியை அவன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அந்த நான்காவது வெளி முற்றிலும் வடிவக் கட்டகம் இல்லாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வீடுவெளி – வேலைவெளி – வடிவக் கட்டகமற்ற வெளி - தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி.

 

வடிவக் கட்டகமற்ற வெளி

வீடு என்றால் தன் அந்தஸ்த்தை விட கூடிய அல்லது குறைந்தவர்களுடன் பழகுதல்,

தொழில் என்றால் தன் துறை சாராத ஒன்றில் இருப்பவர்களுடன் பழகுதல்

தன் இருப்புநிலை பறைசாற்றும் வெளி என்றால், தான் அறியாத ஒன்றில் உள்ளோருடன் பழகுதல்

----இவைகளெல்லாம் ஆன்மீகத்தின் அடித்தளம்.. எனென்றால் ஆன்மீகம் வடிவக் கட்டகமற்றது.

 தத்துவம் என்பது கேள்வியால் கட்டப்பட்டது என முன்பு பார்த்தோம். இங்கு ஒரு கேள்வி நமக்கு எழவேண்டும். அதாவது --- “ஏன் மனிதனை உயர்மனிதனாக்க வேண்டும்?” அல்லது யாராவது ஆக்காவிட்டாலும் ---- “அவனே என் அவனை உயர்மனிதமாக்கிக் கொள்ளவேண்டும்?” 

இதற்கு விடை – மனிதனுக்கு அவனுடைய வாழ்போக்கில் உயிர் தொடர்ச்சி எனும் பிரச்னை உள்ளது. தன் உள் விஷயங்களில் அவன் மாற்றங்களை அனுமதித்துக்கொண்டே தன் சுற்றுச் சூழலுடன் மாறுவதையும் அதாவது சூழலுடன் தகவமைவதையும் உறுதி செய்தால்தான் அவனுடைய உயிர்தொடர்ச்சி நிச்சயமாகிறது. முதல் மாற்றத்தை “தன் புத்துரு” – self renewal -- என்றும் இரண்டாவது மாற்றத்தை “தன் சூழ்செதுக்கம்” _self adaptation -- என்றும் பெயரிடலாம் போலத் தோன்றுகிறது.

தத்துவத்தில் ஒரு முக்கியான விதி என்னவென்றால். எந்த ஒரு கருத்துக்கும்  அதன் நிறைவாக்கிக் கருத்து (complementary concept)  இருக்க வேண்டும் என்பதே. மேலே “கால வெளி”  பத்தியில் நீங்கள் இதனைக் கவனித்திருக்கலாம்.

அதிலிருந்து கீழ்கண்ட வரிகளை மீண்டும் தருகிறேன்.

இடம் எதனாலும் அடை படாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால்  பெறப்படுகிறது. கால வெளியில் காலமே நகருவதாக உள்ளது. நகராத காலத்தை மனிதனால் கருதமுடியவில்லை. ஆனால்,, காலத்தை அறியாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால் பெறப்படுகிறது

இவ்வரிகளில் “பெறப்படுகிறது” எனும் வார்த்தை இவ்விதியை அடியொற்றியே தரப்பட்டது. அதன்படி, உயிர் தொடர்ச்சி என்பதன் நிறைவாக்கிக் கருத்து  “உயிர் உயர்வு” தான்.

உயிர்த் தொடர்ச்சியின் பாகங்களாக வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் வருகின்றன. இந்த ஏற்ற இறக்கங்களால்தான் உயிர்த்தொடர்ச்சி சாத்தியமாகிறது. இதை எதைப் போன்றதென்றால், உடலுக்கு அத 98.4 டிகிரி வெப்பநிலை பராமரிப்பதுதான் முக்கியமாகையில் அதற்காக நோய், வலி, காயம் என காட்டி ஆளை வேலை வாங்கும். வாழ்வில் வரும் புகழ், அவமானம், வறுமை, செழிப்பு, லாபம், நஷ்டம் யாவும் உயிர்த் தொடர்ச்சிக்காகவே. இதில் மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்னவென்றால், இவ்வித ஏற்ற இறக்க நிலைகளில் எதுவானாலும் அந்நிலை அவ்வுயிரின் ”உயிர் உயர்வு” க்குத் தடையல்ல. உயர் உயர்வுக்கான மறுப்பாகவும் இவைகளைக் கொள்ளத் தேவையில்லை. எனவே, உயிர் உயர்வு ஒன்றே மனிதனை அவனுடைய நிலையால் களங்கப்படுத்தாத அம்சம்.

தத்துவத்தின் உறுதியான செய்தியும் இதுவே.


தொடரும் 


Tuesday, June 8, 2021

அறிமுக தத்துவவியல் - 4. தத்துவவியலின் உள்ளடக்கம் - V.R. கணேஷ் சந்தர் மற்றும் K.K. கங்காதரன்

  

அறிமுக தத்துவவியல்

V.R. கணேஷ் சந்தர் மற்றும் K.K. கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

 

4. தத்துவவியலின் உள்ளடக்கம்




தொடரும் ...

Sunday, June 6, 2021

அறிமுக தத்துவவியல் - 3. அடி விழுந்தாலும் சந்தோஷம் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

  

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

          3. அடி விழுந்தாலும் சந்தோஷம்

தத்துவவியலைக் கேள்வி கேட்டு பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தத்துவவியல் அவைகளையும் தன் எல்லைக்கோட்டில் வைத்து அழகு பார்க்கிறது. ஏனென்றால்,

·          இறைமையை ஒப்புக்கொள்ள ஒரு தத்துவம்

·          இறைமையை மறுக்க ஒரு தத்துவம்

·          தத்துவத்தை மறுத்தால் அதுவும் ஒரு தத்துவம்

1 புலனெல்லை அறிவு வாதம் – Positivism.

Positivism என்ற வார்த்தையில் உள்ள Positive என்ற மூலவார்த்தைக்கு “positive Thinking” என்பதில் வருவது போன்று “நம்பிக்கை” என அர்த்தம் கொள்ளக்கூடாது. இங்கு positive என்றால் position என்பதாக அர்த்தம் செய்ய வேண்டும். மனிதன் அறியும் ஒரு விஷயம் அவன் புலன்களில் ஏற்படுத்தும் ஓர் அதிர்வு வரை அது உண்மை. அவைகளைத் தாண்டி ஏதேனும் கற்பிதம் செய்வதும் விவாதம் செய்வதும் வீண். அவ்விஷயத்துடன் புலன்கள் கொள்ளும் position தான் Positivism.

தத்துவத்தின் வேர்மூலத்தையே ஆட்டிவைப்பதான இதுவும் ஒரு தத்துவம்.

2 சந்தேகவாதம் – Scepticism

பழங்காலத்தில் இதற்கு இருந்த அர்த்தத்தை முதலில் பார்ப்போம். பிறகு இதன் தற்கால உருமாற்றத்தை அறியலாம்.

முற்காலத்தில், இறைமையையும் ஆன்மீகத்தையும் முன்னிலைப் படுத்தி, வாழ்வில் வரும் அச்சங்களை வென்று அமைதிப்படுத்த இறைக் கருத்து போதித்த தத்துவங்களை விலக்கி, இறைமை, ஆன்மா என இவ்விரண்டும் தவிர பிற வகைகளில் விளக்கம் தந்த அமைதிப்படுத்த சிந்தித்தவர்கள் இறைமையல்லாத பல தத்துவங்களை முன் வைத்தனர். அவர்கள் இறைமையை சந்தேகப்பட்டதால் சந்தேகவாதம் எனும் கருத்து உருவானது.

தற்போது, சந்தேகவாதத்தின் நவீன உருவம் என்னவென்று பார்ப்போம்.

அதாவது இறைமையோ இறைமை மறுப்போ சிந்தனையாளர்கள் ஆயிரம் சொல்லிவிட்டுப் போகட்டும். முன் நிற்கும் துயரமே சத்யம். அதிலிருந்து தப்பித்து ஓடும் இதய பலவீனக்காரனா மனிதன் ? தத்துவங்கள் பல. எது சரியென சந்தேகத்துடன் ஆராய். மனிதத்தீர்ப்பு ஒருவேளை மூடத்தனமாக இருக்கலாம். எது சரியான தீர்ப்பு என சந்தேகத்துடன் ஆராய். புலன்கள் ஏமாற்றலாம். ஏமாறாதிருக்க என்ன செய்யலாம் என சந்தேகத்துடன் ஆராய். இவைகளைத்தான் இக்கால சந்தேக வாதம் முன்வைக்கிறது. இது மனிதத் துயரத்தை மனிதனே நேர்சந்திப்பில் தீர்க்கப் பார்ப்பது. யாரோ பார்த்துக் கொள்ளட்டும் என பொறுப்பு கை நழுவவிடுவதல்ல.

3 அறியவொணா வாதம் Agnosticism

புலப்படும் மூலகங்களைக் கொண்டு அவைகளின் மூலங்களைக் காண முடியாது எனக்கூறும் வாதம். இது மூலத்தை மறுக்காமல் ஆனால் அதனிடன் தகுதியின்றி அணுகுவதைத் தடுக்கிறது.

 

தத்துவவியலின் ஆதாரப் பிடிமானம்

அறிவியலின் ஒரு விசித்திரப் போக்கு என்னவென்றால் அது மனிதனால் தோற்றுவிக்கப்பட்டு மனிதனைத் தோற்கடிக்கத் தெரிந்த ஒன்று.

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வ வாழ்க்கைக்கு எனக் கூறப்பட்டு ஆரம்பித்திருத்தாலும், நடந்து முடிந்த போர்கள் அனைத்தும் அறிவியலின் அழிவுப் பக்கத்தைப் பார்த்துவிட்டன. இப்போது கேள்வி என்ன எழுகிறது என்றால், அறிவியலை அழிவுப்பாதைக்குப் பயன்படுத்தாத ஒழுக்கம் மனிதனுக்கு எது கற்றுக் கொடுக்கும்? இதற்கு தத்துவவியலில்தான் விடை இருக்கிறது.

தத்துவம் பற்றிய உலகக் கண்ணோட்டம்

தத்துவம் என்றால் என்ன எனும் கேள்விக்கு மாணவர்களின் பதில்கள். ஆனால் அவைளில் சில சரியல்ல., சில பகுதி சரி,

1.   எந்தக் கேள்விக்கும் அல்லது பிரச்னைக்கும் தர்க்க ரீதியான பதில்

2.   வாழ்வின் அர்த்தம் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழி

3.   அனுபவம் மற்றும் தீர்ப்பு அடிப்படையிலான நம்பிக்கைகளும் நடத்தைகளும்

4.   மக்களின் வெவ்வேறு நோக்குகளும் நம்பிக்கைகளும்

5.   தனிமனித அபிப்பிராயங்கள்

6.   ஒரு மனச் சட்டகம்

7.   ஞானிகளின் போதனை

8.  ஒருவனின் நுண்ணறிவுத் திறமைகளைக் கையாளும் விதம்

9. ஒழுக்க விதி மற்றும் பகுத்தறிவின் அடிப்படையிலான கண்ணோட்டம்

10. சிந்திக்க, விவாதிக்க, பகுத்தறியச் சொல்லிக்கொடுக்கும் கலை,

11.  கூட்டச்சிக்கலாய் இருக்கும் ஒரு விஷயத் தொகுப்பை எளிய பகுதிகளாக எல்லா கோணங்களிலிருந்தும் தொகுத்துக் கூறுவதான ஒரு மொழிபெயர்ப்பு

12.  பரம்பரை, பரம்பரையாக இறக்கிவடப்படும் நம்பிக்கைகள், கதைகள், சடங்குகள், அனுபவஙக்ள்.

இவர்களில் எத்தனை பேர் தங்களின் கருத்துக்களை சரியானவையா இல்லையா என பிறரிடம் விவாதித்திருப்பார்கள்? விவாதித்திருந்தால் தத்துவத்தின் முதல் படி எடுத்து வைத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இன்றைய இளைஞனிடம் அவனுடைய தந்தை கொடுக்கக் கூடிய மிகப் பெரிய சொத்து இது எனலாம். அதாவது எதனையும் –- தன்னுடைய தலையாட்டிகளிடம் மட்டுமல்ல -- நானாவித மக்களிடம் விவாதித்து அறியும் ஆவலை கடைசி விடாதிருத்தல்.

உலகக் கண்ணோட்டம் என்பது தத்துவத்தின் தனிமனிதக் கையடக்கப் பிரதி.

தொடரும் ....

Tuesday, June 1, 2021

அறிமுக தத்துவவியல் - 2. கேள்விதான் நிரந்தர பிரச்னை என்றால், சிந்தனைதான் நிரந்தர பதில் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

  

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

 2. கேள்விதான் நிரந்தர பிரச்னை என்றால், சிந்தனைதான் நிரந்தர பதில்

(ஏனென்றால், பதில்கள் பிறந்து இறப்பவை. கேள்வியும் சிந்தனைகளும்தான் சாகாவரம் பெற்றவை)

நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு

  • எது சரியான அரசாட்சி?
  • எது சரியான சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு?
  • இறைவன் இருக்கிறானா?
  • ஆன்மாவின் இருப்பும் அதன் இலக்கும்
  • முந்தைய சந்ததியினரைக் காட்டிலும் இக்காலச் சந்ததியினர் நடத்தையில் முன்னேறியிருக்கிறார்களா?

இவைகளுக்கு இதுதான் விடை! என எந்தக் கேள்விக்கும் தனி ஒரு விடை கூறமுடியுமா?

விடைகள் பலவாக இருக்கும் போது, அறிவியல் அவ்விடைகளிடையே ஒன்றைக் கணக்கிட்டு இதுதான் சரியானது எனக் கூறினாலும், காலப்போக்கில் அது சரியானது அல்ல என அனுபவமே காட்டிக் கொடுக்கிறது. என்றால் அந்த அறிவியலே கேள்விக்குரியது ஆகிறது அல்லவா?

இப்படி இருக்கும் போது,, என்ன செய்வது என்பதைவிட என்ன செய்துவிடக்கூடாது என அறியலாம். அதாவது சந்தேக மனோபாவத்தைக் (Scepticism) கைகொள்ளாமை இன்னும் மோசமாகச் சொல்வதென்றால் எதையும் எதிர்த்து எரிந்து விழுதலைக் Cynicism) கை கொள்ளாமை.

ஓர் அறிவியல்பூர்வ மனிதனுக்கு இது சகஜம்தான். ஆனால் தத்துவபூர்வ மனிதனோ ஒரு விஷயத்தை ஊடுருவிச் சிந்திப்பது அல்லது ஊடுருவிச் சிந்திப்பதற்கு முயற்சிப்பது என்பதைத் தன் ஆளுமையில் (personality) கலந்துவிட்டவன். அறிவியல் அன்றைய அறிவின் ஊடுருவல் வரை ஒன்றை உண்மை அல்லது உண்மையல்ல எனக் கூறும். ஆனால், தத்துவம் அந்த அறிவின் ஊடுருவல் மனிதனுடன் வளரக்கூடியது என்பதையும் கணக்கிடுகிறது. எனவே, தத்துவம் என்பது தீர்க்க சிந்தனை (Reflective thinking) பற்றிய அறிவியலாகும்.

சிந்தித்து சிந்தித்து விடைகண்டு குடும்பம் நடத்தும் அதன் தலைவனாகிய தந்தையின் சிந்தனையை அறியாமல் குழந்தை எல்லாவற்றிற்கும் விடை இருப்பதாக ஒரு கற்பனையில் விளையாடிக் கொண்டே இருக்கிறது.

எது சிறந்த காலம்? எல்லாவற்றுக்கும் விடை இருக்கும் காலமா? எல்லாமே கேள்வியாக உள்ள காலமா? அல்லது இரண்டின் கலப்புடனான காலமா? சிந்திப்பதை முக்கியமாகக் கருதக் கற்றுக்கொடுத்த வாய்ப்பு ஒன்று என்றும் வரலாற்றில் வரவில்லை என்பது பலர் நினைப்பது போல் உண்மை அல்ல. பல வந்திருக்கின்றன. ஆனால், மனிதனின் சுகநாட்டத்தால் அவ்வப்போதிருந்த “நிச்சய” நிலைப்பாடுகளைத் (Condition fixes) தொற்றிக் கொண்டு வாழ்ந்து முடிந்தானேயன்றி சிந்திப்பதை சுகமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் என்பதுதான் உண்மை. இன்றளவும் அதுதான் நடக்கிறது.

ஆனால் அவனுடைய சிந்தனை அவனை தன் அறிநிலைக்கும் அதற்கு ஏற்ப உலகக் கண்ணோட்டம் கொள்ளவும் வைக்கிறது. மனிதனுக்கு அறிநிலை (awareness) இருக்கிறது. அதன்படி, அவனுடைய இருப்பு இரண்டு நிலைகளில் இருக்கலாம்.

  • குறை நிலை
  • நன்னிலை

இப்போது மனிதர்களில் எத்தனை விதங்கள் என இதனை வைத்து ஆராயலாம்.

வ. எண்.

மனிதர்களின் வகைகள்

உலகக் கண்ணோட்டம் (world view)

1

குறை திலை, நன்னிலை என இரண்டு இருப்பதை அறியாதவர்கள்

குழந்தை, மூளை மற்றும் மனக்கோளாறு ஊள்ளவர்கள்.  அறியாமையே ஆனந்தம்

2

அறிந்தாலும் குறைநிலையிலிருந்து நன்னிலை நோக்கி முன்னேற விரும்பாதவர்கள்

காரணங்களைப் பொருத்து மாறுவது.

காரணங்கள்  ---

சோம்பல்

அறிவுள்ளவனை அண்டிப் பிழைத்தல் அறிவுடைமை

ஞானம்

இன்றைய நன்னிலை நாளைய குறைநிலை

பயம்

கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டுவிடுமோ?

அறிவின்மை

ஆகாததற்கு ஆசைப்படாதே

முயற்சித்தும் பயனின்மை

விளையாட்டு வினையாகும்

குறைநிலை மோசமாகாதிருந்தால் போதும் எனும் மனநிலை

உள்ளதைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு

3

குறைநிலையிலிருந்து நன்னிலைக்கு முன்னேற முயற்சிப்பவர்கள்

உன் வாழ்க்கை உன் கையில்

4

குறைநிலையினை வென்று நன்னிலைக்கு வந்தவர்கள்

முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்

5

நன்னிலையிலிருந்து குறைநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்

விதி வலியது

6

இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறவர்கள்

வாழ்க்கைங்கிறது ஆத்துலே ஒரு கால்: சேத்துலெ ஒரு கால்

7

குறைநிலையிலுள்ளோர் நன்னிலையிலுள்ளோரைப் பார்த்துப் பொறாமை

நீ என்ன கொம்பனா?

8.

நன்னிலையிலுள்ளோர் குறைநிலையிலுள்ளோரைப் பார்த்து ஏளனம்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

9

தானும் குறைநிலையிருந்தாலும் பிற குறையிலையிலுள்ளோர் முன்னேற்த் தடை செய்வோர்

என்னாலே முடியாததை நீ மட்டும்

அடைஞ்சிடுவியாக்கும்?

10

நன்னிலையிலுள்ளோர் பிற நன்னிலையிலுள்ளோரைக் குறைநிலைக்குத் தள்ளப் பார்த்தல்

என் ஏணிதான் பெரிசா இருக்கணும்.

11

தான் குறைநிலையிலிருந்தாலும் குறைநிலையிலுள்ளோருக்கு நன்னிலை நோக்கி முன்னேற உதவுதல்

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்துமே.

 

இத்தனை நிலைப்பாடுகளுக்கும் அறிவியல் தனித்தனி பதில் கூறும். ஆனால் தத்துவம் “உலகக் கண்ணோட்டம்” என்ற ஒற்றைப் பதிலில் எல்லவாவற்றையும் அடக்கும்.

ஒருவரின் உலகக் கண்ணோட்டம் அந்த ஒருவரின் நடத்தையை நிர்ணயிக்கிறது என்பதுதான் தத்துவவியலின் ஆத்திசூடி. அது தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை மாற்ற முடிந்தால்தான் உலகம் மாறும்.

உலகக் கண்ணோட்டம் என்பதுதான் என்ன ? “தன்னறிவுக்கு முழுமை எனத் தோன்றும் ஒன்றை நோக்கிய வாழ்நாள் நகர்வு. ஆனால் அந்த “முழுமை” ஒருவன் அனுபவத்தால் வளர்ச்சி அடைகையில் அதுவும் பின்னம்தான் என அறிய நேரிடும்போது புது முழுமை காணும் வாழ்நாள் நகர்வு கை கொள்கிறான்.” இது ஒரு தொடர்பயணம். சமுதாயம் எது நன்னிலை என நிர்ணயிக்கிறதோ அதற்கு நல்ல பிள்ளை ஆவதை முக்கியமாகக் கருதும் வரை இப்பயணம்.

தான் ஒன்றை முழுமை என நினைத்தது எப்படி பின்னம் என அறிய வந்தது என வாழும்போதே யாரும் நுண் குறிப்புச் சிட்டை (log book) வைத்துக் கொள்வதில்லை. ஒருவர் தன் உலகக்கண்ணோட்டதை

  • அறியாதிருக்கலாம்
  • அறிந்திருந்தாலும் சொல்லமாட்டாதிருக்கலாம்
  • மாறிச்  சொல்லவேண்டும் எனக் கபடமின்றி மாறிச் சொல்லலாம்
  • மாறிச் சொல்லவேண்டும் எனக் கபடத்துடன் மாறிச் சொல்லலாம்
  • சரியாகச் சொல்லலாம்.
  • சொல்ல மறுக்கலாம்.

இவைகளுக்கும் காரணம் அவரவர் உலகக் கண்ணோட்டம்தான்.

உலகக் கண்ணோட்டம் வைத்திருப்பதிலிருந்து இரு வகையினம் மட்டுமே தப்பிக்க முடியும்.

  • குழந்தைகள்
  • மூளை மற்றும் மனக் குறைபாடு உள்ளவர்கள்

இவர்களைத் தவிர தத்துவத்திலிருந்து யாரும் தப்பவில்லை.

தொடரும் ....